தூத்துக்குடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் நரேந்திரமோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் கர்நாடக அரசு கலைக்க கோரும் திட்டம் என விவசாயிகள் அடுத்த  நடவடிக்கையில் இறங்க முடிவெடுத்துள்ளனர்.

"காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். 

மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும். 

விவசாய விளைபொருட்களுக்கு அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர் கடந்த 1–ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தைத் தொடங்கினர்.

நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு வந்த விவசாயிகள் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன்பின்னர் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு கோரிக்கை விளக்க துண்டுப் பிரசுரங்களை விவசாயிகள் விநியோகித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஐயாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது:  "கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, மத்திய பா.ஜ.க. அரசு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் காட்டி வருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லையெனில், பிரதமர் நரேந்திரமோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கலைக்க கோருவோம். மேலும், பிரதமரின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்துவோம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதால் அதனை சாப்பிடும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்கும் அபாயமும் உள்ளது. 

விவசாயிகளுக்கு தண்ணீர் தராமலும், விளைபொருட்களுக்கு உரிய விலை தராமலும், விவசாயத்தை அழித்துவிட்டு, தமிழகத்தில் தடையின்றி பெட்ரோலிய பொருட்களை எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. 

விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது" என்று அவர் கூறினார்.

பின்னர் அவரது தலைமையில் விவசாய குழுவினர், கயத்தாறு பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் மக்களுக்கு கோரிக்கை விளக்க துண்டுபிரசுரம் விநியோகித்துவிட்டு கடம்பூர் வழியாக தூத்துக்குடிக்கு புறப்பட்டனர்.