விழுப்புரம் 

விழுப்புரத்தில், மாணவர்களை மறியல் செய்ய தூண்டிய ஆசிரியை மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். உதவி தொடக்க கல்வி அலுவர் கொடுத்த புகாரின் பேரின் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ளது செம்மணந்தல் கிராமம். இந்த கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியை இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் இரண்டு பிரிவாக செயல்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, தலைமை ஆசிரியர் உள்பட ஒன்பது ஆசிரியர்களும் கடந்த 14-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும், புதிய ஆசிரியர்களை உடனே நியமிக்கக் கோரியும் அந்தப் பள்ளி மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலிகளை வெளியே தூக்கிப் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரில், "பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை சுகந்தி பள்ளிக்கு தனது பொருள்களை எடுக்க வந்தபோது, மாணவர்களை போராட தூண்டியுள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகாரின்பேரில், மாணவர்களை மறியல் செய்ய தூண்டியதாக ஆசிரியை சுகந்தி மீது திருநாவலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.