முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவர் மீதும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று திருப்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், "சொத்து வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். 

உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை. பல்வேறு காரணங்களை கூறி தேர்தலைத் தள்ளிப்போட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் மத்திய அரசு தரவேண்டிய 5300 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. இதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பு" என்று காட்டமாக தெரிவித்தார் கே.பாலகிருஷ்ணன்.

k.balakrishnan க்கான பட முடிவு

மேலும், "திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளால் சிறுத் தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. 

ஜி.எஸ்.டி.யால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கவில்லை. வரியை வசூலித்துவிட்டு திரும்பப் பெறும் தொகையையும் மத்திய அரசு திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் சிறு உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய 3000 கோடி - 4000 கோடி வரையான பணம் இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் பின்னலாடை தொழிலே தடுமாறி வருகிறது" என்று மத்திய அரசின் தவறுகளை அடுக்கடுக்காக எடுத்துவைத்தார்.

ops and eps க்கான பட முடிவு

மாநில அரசையும் விடவில்லை கே.பாலகிருஷ்ணன். அவர், "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, விசாரணை முறையாக நடக்க இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"தமிழக அரசு உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சொத்து வரியை உயர்த்துவதுக் குறித்து தீர்மானிக்கட்டும். மாறாக அதிகாரிகளைக் கொண்டு சொத்து வரி உயர்த்துவது தவறு" என்று சுட்டிக்காட்டினார் கே.பாலகிருஷ்ணன்.