சிவகங்கை

சிவகங்கையில் காரும், பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும், உறவினர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் விஜய் ஆனந்த். இவர் மனைவி பாக்கியலட்சுமி, மகன் முத்துராமு. இவர்கள் நேற்று தனது உறவினர் ஜெயபார்த்த சாரதியுடன் காரில் இராமேசுவரத்திற்கு சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கிருந்து மாலையில் புறப்பட்டு, திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை விஜய் ஆனந்த் ஓட்டி சென்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியில் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

அப்போது, காரும், பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியதில் கார் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. காரின் முன்பக்கக் சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த கொரூர விபத்தில் காரில் இருந்த விஜய் ஆனந்த், மனைவி பாக்கியலட்சுமி, மகன் முத்துராமு ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஜெயபார்த்த சாரதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். ஆனால், அவரும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், திருப்புவனம் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து திருப்புவனம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.