carnatic singer radha vishwanathan passes away yesterday night at chennai

கர்நாடக இசை மேடைகளில் கோலோச்சியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவரின் கணவர் சதாசிவத்தின் மூத்த மனைவியின் மகள் ராதா. இவர், எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் பல்வேறு மேடைகளில் இணைந்து பாடியுள்ளார். எம்.எஸ்ஸுக்கு பக்கபலமாக குரல் கொடுத்தவர் ராதா. இவர் தனது 84வது வயதில் நேற்று இரவு காலமானார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசிகரக் குரலால் உலகை வசப்படுத்தினார் என்றால், அவருக்குப் பக்கபலமாக பின் குரல் கொடுத்தவர் ராதா. இருவரும் இணைந்து ஆலாபணைகளைச் செய்யும்விதம் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்று. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் எம்.எஸ். பாடியுள்ளார். அப்போதெல்லாம் உடனிருந்து பாடியவர் இவர்.

கல்கி சதாசிவத்தின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் ராதா. சதாசிவத்தின் முதல் மனைவி காலமான பின், கர்நாடக இசை உலகில் அப்போதுதான் நுழைந்து பாடத் தொடங்கிய எம்.எஸ்ஸை சதாசிவம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், அவர்களின் மகள் ராதாவைத் தன் மகளாகப் பார்த்துப் பார்த்து வளர்த்தார் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவரையும் இசை உலகில் தன்னுடன் கை கோர்த்து அழைத்துச் சென்றார். எம்.எஸ். போன்றே வாய்ப்பாட்டிலும், வீணை இசைப்பதிலும் ராதாவுக்கும் அலாதி பிரியம் உண்டு. மேலும், பேராசிரியர் கல்கியின் மகள் ஆனந்தியும், கல்கி சதாசிவத்தின் மகள் ராதாவும் ஒன்றாகச் சேர்ந்து சிறு வயதில் வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியமும் பயின்றனராம். 

இந்நிலையில் ஜன.2 நேற்று இரவு ராதா விஸ்வநாதன் தமது 84ஆவது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக வயது முதிர்வின் காரணத்தால் உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ராதா. இவரது மறைவுக்கு திரையுலகத்தினர், கர்நாடக இசை உலகத்தினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.