சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தகாத வார்த்தையால் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னர் ஓட்டுநரே பேசி பதிவு செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ம் தேதி காலை 8 மணியளவில் டிஎல்எஃப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். வழியில் மற்றொரு ஊழியரை ஏற்றிக் கொள்வதற்காக அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்றிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் 2 பேர் காலை இங்கு நிறுத்தக்கூடாது எனக் கூறி அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. காரின் பின்புறத்தில் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரஜேஷ் மறைமலைநகர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மரணத்திற்கு போலீசார் தான் காரணம் என்று மனக்குமுறலை பதிவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது சாவு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். 

இதேபோல் கடந்த ஆண்டு தரமணி அருகே தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டியதால், மணிகண்டன் என்பவர் சாலையிலேயே தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.