Asianet News TamilAsianet News Tamil

வாய்ப்பு பறிபோகுமா? அச்சத்தில் வேட்பாளர்கள்

candidates fear
Author
First Published Oct 7, 2016, 1:07 AM IST


உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது வாய்ப்பு பறிபோகுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனால், போதிய அவகாசம் இல்லாததால் அவசர கதியில் மனுதாக்கல் செய்யும் சூழல் ஏற்பட்டது.

ஆளும் கட்சியினரைத் தவிர, மற்ற கட்சியினர் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குக் கூட நேரம் இல்லாமல் தவித்தனர். மேலும், துரித கதியில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள் இதுவரை அவரவர் சக்திக்கேற்ப ரூ. 1 இலட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் அறிவிப்பை இரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஒருவேளை மேல் முறையீட்டிலும் முந்தைய உத்தரவே தொடரும் என்று தீர்ப்பு வருமேயானால், உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்.

இந்நிலையில், அரசியல் கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பை தவறவிட்ட வேட்பாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.

இதனால், ஏற்கெனவே மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது வாய்ப்புப் பறிபோய்விடுமோ என்ற அச்சத்திலும், அதனை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியிலும் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios