Call taxi drivers have been involved in the fight before the Government Medicare campus.

ஓட்டுநர் மணிகண்டன் இறப்புக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவனை வளாகம் முன்பு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த மணிகண்டனுக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

விரக்தியடைந்த ஓட்டுநர் மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த மணிகண்டன் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் ஓட்டுநர் மணிகண்டன் இறப்புக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவனை வளாகம் முன்பு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.