“இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்” கேப்டனுக்காக குவிந்த தொண்டர்கள்
தேமுதிக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் நோக்கத்துடன் சென்னைக்கு வந்து பல கம்பெனிகளில் வாய்ப்புக்காக அழைந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என இரு ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்த சூழலில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
சினிமா சூட்டிங்கில் நாயகன், நாயகி உட்பட முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் உணவு அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று திரைத்துறையில் எழுதப்படாத சட்டத்தை உருவாக்கியவர். இவரது முயற்சிகளுக்கு பிறகே திரைத்துறையில் அனைத்து ஊழியர்களுக்கும் பொட்டல உணவுக்கு குட்பை சொல்லப்பட்டு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து தனது நேர்மையான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளால் கவனம் பெற்ற விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று நடிகர் சங்க கடன்களை அடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டார்.
இவரது நேர்மை மற்றும் யாருக்கும் அஞ்சாத குணம் இவரை திரைத்துறையோடு முடக்கி விடாமல் அரசியலுக்கும் இழுத்து வந்தது. அதன்படி 2005 செப்டம்பர் 14ம் தேதி தேமுதிக என்ற புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். திரைத்துறையைப் போன்றே அரசியலிலும் விஜயகாந்துக்கு ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரிய ஆளுமைகள் தமிழக அரசியலை எழுதி வந்தனர். இவர்களுக்கு மத்தியில் கட்சியைத் தொடங்கி மிகவும் குறுகிய காலத்திலேயே பல்வேறு உச்சங்களைத் தொட்டவர்.
குறிப்பாக 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த விஜயகாந்த் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்து ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக விளங்கினார். அதிமுக, திமுக.வுக்கு மாற்று நாங்கள் தான் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், 2011ம் ஆண்டு திமுகவை பின்னுக்குத் தள்ளியது தமிழக அரசியலை மாற்றி எழுதியது. ஆனால் சிறிது காலத்திலேயே அவரது உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவானது அவரது அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
தமிழக அரசியலில் விஜயகாந்த் இன்று இருந்திருந்தால் சீனே வேற என்று சொல்லக்கூடிய அரசியல் விமர்சகர்கள் பலரும் உள்ளனர். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சரியாக 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவு எப்படி தமிழக மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். இந்நிலையில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக அதிகாலை முதலே தேமுதிக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணி செல்ல தேமுதிக சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் பேரணி செல்லும் முனைப்புடன் தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.