தஞ்சாவூர்,

வாங்கிய கடனை இந்த மாதத்துக்குள் ஒரே தவணையாக கட்ட வேண்டும் என்று கூறி அடியாட்கள் மூலமாக மிரட்டுகிறார்கள் என்று ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த திருநல்லூரை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற விவசாயி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் விவசாயிகள் தலைமையில் ஆட்சியர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில், “நான் விவசாயத்திற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு டிராக்டர் ஒன்றை நிதிநிறுவனம் மூலம் கடன் பெற்று வாங்கினேன். அசல், வட்டி என ரூ.6 இலட்சத்து 30 ஆயிரத்தை ஆண்டுக்கு நான்கு தவணை வீதம் பணம் செலுத்துவதாக கூறினேன்.

ஆனால், தற்போது வறட்சி காரணமாக என்னால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இதுவரை ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கட்டி உள்ளேன். இன்னும் ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது.

இந்த தொகையை இந்த மாதத்துக்குள் ஒரே தவணையாக கட்ட வேண்டும் என்று கூறி நீதிமன்றம் மூலமாகவும், அடியாட்கள் மூலமாகவும் மிரட்டுவதோடு, எனது டிராக்டரையும் பறிமுதல் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

நான் தவணை அடிப்படையில் செலுத்துகிறேன் என கூறியும் அதனை ஏற்க நிதிநிறுவனம் மறுத்துவிட்டது. எனவே, தவணை முறையில் தொகையை கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கடனுக்கு டிராக்டர் வாங்கிய விவசாயிகளால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. எனவே, டிராக்டர்களை பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்”
என்று அதில் கூறப்பட்டுள்ளது.