businessmen fight against gst
தஞ்சாவூர்
வாட்வரி, ஜி.எஸ்.டி. வரி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் போன்றவற்றை திரும்ப பெற கோரி தஞ்சாவூரில், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.
"இந்தியாவில் சில்லறை வணிகத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வாட்வரி, ஜி.எஸ்.டி. வரி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் போன்ற சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும்,
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற கோரியும்" கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்திருந்தது.
அதன்படி ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் சரபோஜி சந்தை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பள்ளியக்கிரகாரம், கரந்தை பூக்காரத்தெரு, ரெயிலடி ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் ரமேஷ், நகரத் தலைவர் சேதுராமன், நகர பொருளாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட இணைச் செயலாளர்கள் பெருமாள், குமரேசன், நிர்வாகிகள் பேச்சுமுத்து, பஞ்சநாதன், செல்வக்குமார், முருகானந்தம், துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று கருப்புக்கொடியை ஏற்றி வணிகர்களின் வாழ்வுரிமை காக்க ஒன்றுபடுவோம் என்று முழக்கங்களை எழுப்பினர்.
