பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடைக்குப்பின் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வங்கியில் ரூ. 246 கோடி டெபாசிட் செய்து இருந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் கணக்கில் வராத பணத்தை வங்கியில் ரூ. 600 கோடிக்கு மேல் டெபாசிட் செய்து இருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ‘பிரதமர் கரீப் கல்யான் யோஜனா’(பி.எம்.ஜி.கே.ஓய்) திட்டத்தில் தங்கள் பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து வருமான வரித்துறையின் மூத்த, முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது-

கரீப் கல்யான் திட்டம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், கருப்புபணத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்தோம். அதில் கருப்புபணத்தை டெபாசிட் செய்ய ‘பிரதமர் கரீப் கல்யான்யோஜனா திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இதில் கருப்புபணத்தை ஒப்படைப்பவர்கள் 45 சதவீதம் வரியும், 25 சதவீத பணத்தை 4 ஆண்டுகள் வட்டியில்லாத டெபாசிட்டிலும் வைத்து இருக்க வேண்டும், மீதம் உள்ள பணம் கையில் கிடைக்கும்.

ரூ.2.5 லட்சத்துக்கு மேல்

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு  பின், வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல்  தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் டெபாசிட் செய்த நபர்களின் பட்டியலை வங்கியில் இருந்து கேட்டுப் பெற்றோம்.

நவீன சாப்ட்வேரில்ஆய்வு

எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து விவரங்களையும், எங்களின் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை நவீன ‘சாப்ட்வேர்’ உதவியுடன் ஆய்வு செய்து, அதை மீண்டும் மண்டல வருமானவரி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

28 ஆயிரம் கணக்கு

இதில் தமிழகம், புதுச்சேரியில் மட்டும் ஏறக்குறைய 28 ஆயிரம் வங்கிக்கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் டெபாசிட் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலரின் வங்கிக்கணக்கில் ரூ. 85 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து ‘விசாரணை பிரிவு’, ‘மதிப்பீட்டுக் குழு’ என இருபிரிவாகப் பிரித்து நடவடிக்கையைத் தொடங்கினோம். அனைத்து நபர்களின் பான் கார்டு எண்ணும் வங்கி மூலம் விசாரணைப் பிரிவுக்கு அளிக்கப்பட்டது.

மின்அஞ்சல்

இதன்படி ஒவ்வொரு நபருக்கு தனித்தனியாக மின் அஞ்சல் அனுப்பி விசாரணையைத் தொடங்கினோம். சிலர் பதில் அளித்தார்கள், சிலர் அந்த மின் அஞ்சலையே ரத்து செய்தார்கள். ஆனால், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ‘பிரதமர் கரீப் கல்யான் யோஜனா’ திட்டத்தில் தங்கள் பணத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர்.

தமிழகம்

இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 246 கோடி டெபாசிட் செய்துள்ளார். பெரும்பாலும் இந்த பணத்தை கிராமங்களில் உள்ள கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளாகடெபாசிட் செய்துள்ளார்.

ரூ.246 கோடி

நாங்கள் அவரை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக கண்காணித்ததில், அவர் ரூ.246 கோடி டெபாசிட்செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இதை மறைத்த அந்த தொழிலதிபர் பின் ஒப்புக்கொண்டு, ‘பிரதமர் கரீப் கல்யான் யோஜனா’ திட்டத்தில் சேர்ந்தார்.  இதில் அவர் 45 சதவீதம் செலுத்தி, 25 சதவீத பணத்தை 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட் செய்ய வேண்டும். இதுபோல பல தனிநபர்கள், நிறுவனங்கள் டெபாசிட் செய்து இருந்தன.

கிராமங்களில்

பெரும்பாலான தனிநபர்கள்,  கிராமங்களில் உள்ள வங்கிக்கிளைகளிலும், சிலர் சென்னை வங்கிகளிலும் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும், புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகள், கிராமங்கள், சிறிய நகரங்கள் ஆகியவற்றில் இருக்கும் வங்கிகளில் டெபாசிட்செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

நாங்கள் அனுப்பிய மின் அஞ்சல், நோட்டீசுக்கு பலர் இன்னும் பதில் அளிக்கவில்லை. மார்ச் 31-ந் தேதி வரை அந்த நபர்களுக்கு பின்னால் செல்வோம். அதற்குள் கருப்புபணத்தை டெபாசிட்செய்தால், 45 சதவீதம் வரி, ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு 83.5 சதவீதம் செலுத்த வேண்டும்.

ரூ.1000 கோடியாக உயரும்

இதுவரை தமிழகம், புதுச்சேரியில் ரூ.600 கோடிக்கு மேல் கருப்புபணம் சிக்கியுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் ரூ.1000 கோடியை எட்டும் என நினைக்கிறோம். ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின் எங்களின் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.