bus strike started in chennai
போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ அரசு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்றே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலுவை தொகை, பஞ்சப்படி ஆகியவை நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன.
இது குறித்து மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.பேச்சு வார்த்தையில் நிலுவை தொகையாக ரூ.750 கோடி ஒதுக்கப்படும் என அரசு கூறியது. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
மறுப்பு
இதனையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. வரும் செப்டம்பருக்குள் நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடியில், ரூ.1,250 கோடியை வழங்க அமைச்சர் உறுதியளித்தார்.
இதனை ஏற்பதா வேண்டாமா என்பது பற்றி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இறுதியில் அமைச்சரின் வாய்மொழி உத்தரவை நம்ப முடியாது என்றும் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் ஒரு சில அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தையடுத்த சென்னை, வேலூர், ஊட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்றே தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என தெரிகிறது.
இதற்கிடையில், தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை தோல்யிடைந்ததை அறிந்தும், பல்வேறு மாவட்டங்களில் அனைத்து பஸ்களும், பணிமனைகளில் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதையொட்டி தஞ்சை, தேனி. மதுரை. நீலகிரி, வேலூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
