கடத்தூர்,
கோபி அருகே பள்ளிக்கூடம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானது. பேருந்தில் இருந்தோ சுதாரித்துக் கொண்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள தனியார் பள்ளியில் மண்டல அளவிலான தடகள போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 61 மாணவ–மாணவிகள் ஒரு தனியார் நிறுவன பேருந்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் வந்தனர். பேருந்தை பொள்ளாச்சியைச் சேர்ந்த துரைசாமி (53) ஓட்டி வந்தார். உதவியாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சந்திரகுமார் (45) என்பவர் இருந்தார்.
ஒத்தக்குதிரையை வந்தடைந்ததும் பேருந்தில் இருந்து 61 மாணவ–மாணவிகளும் இறங்கி விளையாட்டில் கலந்து கொள்ள அந்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றனர். அப்போது, அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பை மற்றும் உடைமைகளையும் கையோடு எடுத்து சென்றனர். பேருந்து மட்டும் அந்த பள்ளியின் முன்பு சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
மாணவ–மாணவிகள் அனைவரும் சென்றதும் டிரைவர் துரைசாமி, சந்திரகுமார் ஆகியோர் பேருந்தின் முன் சீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பகல் 11 மணி அளவில் பேருந்தின் பின் பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.
இதை கண்டதும் துரைசாமி, சந்திரகுமார் ஆகியோர் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும், இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேருந்தில் பற்றிய தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். எனினும் முடியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபி தீயணைப்பு நிலைய அதிகாரி முனியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்தது.
பேருந்தில் உள்ள மின் வயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபி காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, பன்னீர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேருந்தில் மாணவ–மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கோபி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
