கொடைக்கானலில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகள் அங்கயே எரிக்கப்படுவதால் மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகின்றனர். மேலும், சுற்றுச் சூழல் பாதிப்பும், சுகாதாரக் சீர்க் கேடும் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிரகாசபுரம் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக கொடைக்கானல் நகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. இந்தக் குப்பைத் தொட்டிகள் மாற்றப்படாததால் வீடுகள், உணவகங்கள் இருந்து வரும் குப்பைக் கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன.
அவற்றை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சாலையிலேயே தீவைத்து எரித்து விடுகின்றனர். இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளகின்றனர். சுகாதாரக் சீர்க்கேடு நிலவுகிறது.
எனவே கொடைக்கானல் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறியது:
“கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை லாரி மூலம் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டால் மட்டுமே நகர்ப் பகுதிகளில் சீரான முறையில் குப்பைகளை அகற்ற முடியும்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய குப்பைத் தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
