கிருஷ்ணகிரி அருகே குடும்பத்தகராறில் தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி புட்டண்ணா. இவருக்கு இரண்டு மகன்கள். சங்கரப்பா(35),  கணேசன்(28). 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அண்ணன் சங்கரப்பா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து கணேசனை வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளார். 

தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை கொண்டாடிய இருவரும் இரவு மது அருந்தியுள்ளனர். 

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியைதையடுத்து ஏற்பட்ட தகராறில் திடீரென  சங்கரப்பா வீட்டில் இருந்த தனது நாட்டுத்துப்பாக்கியால், கணேசனை சுட்டார். 

இதில் கணேசனின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இதையடுத்து சங்கரப்பா துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கணேசன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப்பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த தளி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக  உள்ள சங்கரப்பாவை தேடி வருகின்றனர்.