Broke green bananas hurricanes uprooted So much rain

திருச்சியில் குலைக்கும் பருவத்தில் இருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் முறிந்து விழுந்து சேதமாயின.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் ஊராட்சி ஆலங்களம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் நேந்திரன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.

கடும் வறட்சி நிலவி வந்ததால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மூலம் வாழைகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சினர்.

விவசாயிகளின் கடும் சிரமத்திற்கு இடையே வாழைகள் நன்கு வளர்ந்து குலைதள்ளிய நிலையில் இருந்தன. சில வாழைகள் குலைக்கும் பருவத்தில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முக்கொம்பு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வாழைகள் முறிந்து விழுந்தன.

ஒரு வாழைக்கு ரூ.30 வரை செலவு செய்து, தற்போது குலைக்கும் பருவத்தில் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் கடும் நட்டத்தைச் சந்தித்து உள்ளனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சேது என்ற விவசாயி முக்கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் அனைத்து வாழைகளும் வேரோடு முறிந்து விழுந்தன.

மேலும் ஒவ்வொரு விவசாயிகளின் நிலத்திலும் 100 முதல் 200 வரை வாழைகள் முறிந்து விழுந்தன.

ஆலங்களம் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழைகள் பலத்த காற்றுக்கு முறிந்து விழுந்துள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, “பருவமழை பொய்துள்ள நிலையில் கடும் சிரமத்திற்கு இடையே ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்த வாழையை காப்பாற்றி வந்துள்ளோம்.

இந்த நிலையில் குலைக்கும் பருவத்தில் வாழை முறிந்துள்ளதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். மீதம் இருக்கும் வாழையை காப்பாற்ற கம்புகள் நடலாம். ஆனால் அந்த கம்புகளை வாங்கி நட குறைந்த பட்சம் ரூ.35 செலவாகும். ஏற்கனவே கடனில் மூழ்கி இருக்கும் நாங்கள் கம்புகளை வாங்க முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே காற்றில் முறிந்து விழுந்த வாழைகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினார்.