நாட்டு மாடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஈரோட்டைச்  சேர்ந்த  இளைஞர்  ஒருவர் திருமண கோலத்தில் தனது மனைவியை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக வந்தார். இது அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் பிரவீன். மஞ்சள் விவசாயம் செய்து வரும்  இவர், காங்கேயம் காளிகள் உள்ளிட்ட நாட்டு மாடுகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். நாட்டு மாடு வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம்  காரணமாக அதற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்த பல முயற்சிகள் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும் நத்தக்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அவர்களது திருமணம் நேற்று ஈரோட்டில் நடந்தது.மாடுகளின் வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட பிரவீன் தனது திருமணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்

திருமணம் என்றாலே மணமக்கள் காரிலும், பல்லக்கு சாரட் வண்டி போன்றவற்றில்  அழைத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் பிரவீன் புதுமையாக தனது புதுமனைவியை அவரது வீட்டுக்கு மாட்டு வண்டியில் அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.

அதன்படி மாட்டு வண்டி தயார் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அந்த வண்டியில்  மாடுகள் பூட்டப்பட்டு தனது புதுமனைவியை பிரவீன் ஏற்றினார்.பின்னர் ஈரோட்டில் இருந்து நத்தக்காடு நோக்கி மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார்.

நத்த காட்டில் மணமக்களை  அவரது உறவினர்கள் வரவேற்றனர். மாட்டுவண்டியில் திருமண கோலத்தில் சென்ற புதுமண தம்பதிகளை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். மேலும் மணமகள் பிரவீனை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.