பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதால் முன்னாள் துணைவேந்தர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி, பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டி.சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேலும் வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். 

இதனிடையே தமிழ் பல்கலை கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 23 பேர் நியமிக்கப்பட்டதாகவும் அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதேபோல், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில்துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாகவும் அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளதாகவும் அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகவும் அன்புமணி புகார் கூறியிருந்தார். 

துணைவேந்தர் கணபதி கைது பிறகு அனைத்து பல்கலைகழகங்களின் ஊழல் வெளிவரத்தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் சென்னையிலும் 2 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ராஜாராம், தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான வணங்காமுடி ஆகிய இருவர் மீதும் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் வாங்கியதாக புகார்  எழுந்து வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இருவருக்கும் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். ராஜா ராமுக்கு சொந்தமான சென்னை, தேனி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியது. முக்கிய ஆவணங்களும் கைற்றப்பட்டுள்ளன.

வணங்காமுடிக்கு சொந்தமான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ. 97 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கி உள்ளது.