தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே வனத்தில் ஆடு மேய்க்க அனுமதி வழங்க தொழிலாளியிடம் ரூ.14 ஆயிரம் இலஞ்சம் கேட்ட வனவரை, லஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் பொறி வைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உடையாளபுரம் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (42). இவர், தமிழ்நாடு முழுவதுமுள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினரிடம் அனுமதிப் பெற்று ஆடு மேய்த்து வருகிறார்.

அதற்காக வனப்பகுதிக்குச் சம்பந்தப்பட்ட வன அலுவலத்திற்குச் சென்று முன் அனுமதி பெறுகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடி அருகேயுள்ள போந்தை நாராயணகுப்பம் வனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக தானிப்பாடி வன அலுவலகத்திற்குச் சென்று அனுமதி கேட்டு இருக்கிறார்.

அப்போது அங்கு பணியில் இருந்த வனவர் காளிதாஸ் (45) வனப்பகுதியில் ஆடு மேய்க்க அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் இலஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் ரூ.15 ஆயிரம் இல்லை. மேலும் எந்த பகுதியிலும் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வனத்துறையினர் யாரும் இலஞ்சம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு காளிதாஸ், ரூ.15 ஆயிரம் இலஞ்சம் தந்தால் ஆடு மேய்க்க அனுமதி அளிக்கப்படும். இல்லையென்றால் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்துப் புறப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் காளிதாஸ் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தியை பின்தொடர்ந்து சென்று விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் மடக்கியுள்ளார். பின்னர் ரூ.15 ஆயிரம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிச் செல் என்று கிருஷ்ணமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை காளிதாஸ் பறித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வேலூர் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடாந்து இலஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் அசோகன், திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம், இலஞ்சம் கேட்ட வனவர் காளிதாசை கைது செய்யத் திட்டமிட்டனர்.

அதைத் தொடர்ந்து இரசாயனம் தடவிய ரூ.14 ஆயிரத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர், நேற்று மதியம் காளிதாசுக்கு போன் செய்து ரூ.14 ஆயிரம் வைத்திருப்பதாகவும், அதனை தானிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே வந்து வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார்.

சொன்னபடி வார்த்தை தவறாமல் பேருந்து நிறுத்தம் வந்த காளிதாஸ் ரூ.14 ஆயிரத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வாங்கியபோது, மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் காளிதாசை பொறிவைத்து பிடிப்பது போல பிடித்து கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் வனவர் காளிதாசை தானிப்பாடி வன அலுவலகத்திற்குக் கொண்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.