கடலூர்

கடலூரில், ஜாமீனில் வெளியே வந்த காதலன், தனது காதலி தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில் இரயில் முன்பு பாய்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள புதுவிளாங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் மகன் வீரச்செல்வன் (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சசிகலா (20) என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். 

இந்த நிலையில் இவர்களது காதலுக்கு சசிகலாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சசிகலாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். 

இதில் மனமுடைந்த சசிகலா கடந்த நவம்பர் மாதம் விஜயமாநகரத்தில் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அறிந்த சசிகலாவின் தந்தை செல்வராஜ், விருத்தாசலம் இரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி வீரச்செல்வனை கைது செய்தனர்.

அதன்படி, கடலூர் மத்திய சிறையில் இருந்த வீரச்செல்வன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் காதலி இறந்த மன வேதனையில் உறவினர்கள் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சசிகலா தற்கொலை செய்துகொண்ட அதே இடத்திற்கு நேற்று அதிகாலையில் வீரச்செல்வன் சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வந்த ஒரு இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் இரயில்வே காவலாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தற்கொலை செய்துகொண்ட வீரச்செல்வன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜாமீனில் வெளியே வந்த காதலன், காதலி இறந்த அதே இடத்திலேயே இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.