சென்னை மேடவாக்கம் அருகே பெற்றோர் திட்டியதால், மாயமான பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பாலசங்கர் என்ற மாணவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

பாலசங்கர், சரியாக படிக்கவில்லை என்று அவனின் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பாலசங்கர், வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

பாலசங்கர் காணாமல் போனதை அடுத்து, அவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முதல் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் அருகே உள்ள பழைய கட்டிடத்தில் பாலசங்கர் உடல், கருகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலசங்கர் உடல் கண்டெடுக்கப்பட்ட கட்டடத்தில் மண்ணெண்ணெய் கேன்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசங்கர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.