45-வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டும். இந்த முறை வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புத்தக கண்காட்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி புத்தக கண்காட்சி நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 45-வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனையை செய்ய உள்ளதாகவும் , bapasi.com என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி தொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பபாசி செயலாளர் முருகன் பேசியபோது, ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளதாக அவர் கூறினார். அதே போல், கடந்த ஆண்டு போலவே கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று கூறிய அவர்கள், தமிழர்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளில் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
