bomb threat forSalem Periyar University mysterious person cheated the police ...

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து காவலாளர்கள் ஐந்து மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

சேலம் மாவட்டம், கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இணைவுப் பெற்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், பணியில் இருந்த காவலரிடம், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சிறிது நேரத்தில் அது வெடிக்கும்‘ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். 

இதையடுத்து அவர்கள் பல்கலைக்கழகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறை அலுவலகங்கள், நூலகம், கலையரங்கம், நிர்வாக அலுவலக அறைகள் உள்ளிட்டவைகளிலும் கடும் சோதனை செய்யப்பட்டது. 

இதுதவிர தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக அறையில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய விடைத்தாள் பண்டல்களையும் எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு மர்ம நபர் பேசிய போன் எண்ணை வைத்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். இதில், சேலம் ஆத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் போன் மூலம் மர்ம நபர் பேசியது தெரியவந்தது. 

இதையடுத்து போனில் பேசி மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர்யை சூரமங்கலம் காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.