வேலூர்

வேலூரில் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதால் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து  காட்டுப் பன்றிகளை கொல்லப்படுவதை தடுக்க வனத்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் வன விலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக விளை நிலங்களில் வளர்ந்துள்ள பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.  தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் காட்டைவிட்டு வெளியேறி கிராமங்களை நோக்கி வரும் வன விலங்குகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், காட்டுப் பன்றிகள், அதிகளவில் பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன. அவ்வாறு பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பயிர்களைப் பாதுகாக்கக் காட்டுப் பன்றிக்கு சிலர் வெடி வைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. கந்தகம், கரித்தூள், வெள்ளைக்கல் தூள் உள்ளிட்ட சில வெடிபொருள்களை கலந்து உருண்டையாகப் பிடித்து அதன் மீது இறைச்சி கொழுப்புகளை தடவி, அதன் மேல் கயிறை இறுக்கமாக சுற்றி வெயிலில் காயவைத்துவிடுவார்கள்.

வெயிலில் காய வைக்கப்பட்ட அவை வெடிக்க தயாராக இருக்கும். இறைச்சி கொழுப்பு தடவி இருப்பதால் அதன் வாசனை காட்டுப் பன்றிகளை கவர்ந்திழுக்கும். அப்போது நிலத்தில் புதைத்து வைத்திருக்கும் நாட்டு வெடிகுண்டுகளைக் கடிக்கும் போது காட்டுப் பன்றிகள் தலை சிதறி இறக்கும். அவ்வாறு இறக்கும் காட்டுப்பன்றிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி மறைவிடங்களில் புதைத்து விடுவார்கள்.

மாவட்டத்தின் வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களில் காட்டுப் பன்றிகளுக்காக வெடிகுண்டு வைப்பது மறைமுகமாக நடந்து வருகிறது. இதை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. அதேபோல நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதையும் காவலாளர்கள் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இரு வழிகளில் சட்டத்துக்கு புறம்பானச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

விவசாய விளை நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசப்படுத்துவதாக இருந்தாலும், அதை வெடிவைத்து கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை. குறைந்த மின் அழுத்த சூரியசக்தி மின்வேலிகளை அமைத்து கூட பயிர்களைப் பாதுகாக்கலாம் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.