சென்னையில் மீண்டும் சொகுசு கார் , போதையில் காரோட்டி விபத்து - இரண்டு மாணவர்கள் படுகாயம்
சென்னையில் பெரிய மனிதர் வீட்டு பிள்ளைகள் போதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்துவது வாடிக்கையான விஷயமாக மாறி வருகிறது. ஆர்.ஏ.புரத்தில் இன்று காலையில் போதையில் காரோட்டி வந்த பெரிய மனிதர் வீட்டு பிள்ளை ஒருவர் தாறுமாறாக காரோட்டி மோதியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய மனிதர்கள் வீட்டு பிள்ளைகள் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் பின்னர் போதையில் காரோட்டி வருவதும் அதனால் விபத்துகள் நேர்வதும், அப்பாவிகள் உயிர் போவதும் போலீசார் அதை சாதாரண வழக்காக பதிவு செய்வதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது. பிரபல சாராய வியாபாரி எம்பி மினரல்ஸ் அதிபர் மகன் ஷாஜி போதையில் காரோட்டி எழும்பூர் மகப்பேரு மருத்துவமனையில் விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு சிறுவன் பலியானான். அவனது பாட்டி படுகாயமடைந்தார்.
ஆடிகார் ஐஸ்வர்யா போதையில் காரோட்டி விபத்து ஏற்படுத்தியதில் முனுசாமி என்ற குடும்பத்தலைவர் பலியானார். நடிகர் அருண் விஜயகுமார் போதையில் காரோட்டி நுங்கம்பாக்கத்தில் போலீஸ் வேன்மீதே மோதிவிட்டு தப்பி ஓடினார். சமீபத்தில் கார்ரேஸ் டிரைவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். ஒரு ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்து போனார்.
ஆனாலும் இது போன்ற விபத்துகள் குறையும் வழி இல்லை. நேற்றிரவு வீக்-எண்ட் பார்ட்டியில் கலந்துகொண்டு போதை பவுடரை உபயோகப்படுத்திய இளைஞர் ஒருவர் இன்று காலை 7 மணி அளவில் கே.பி.ராமசாமி சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை நோக்கி தனது BMWசொகுசு காரில் வந்துள்ளார். அப்போது அங்குள்ள சங்கீதா ஓட்டலில் (இவர்கள் சாலையை ஆக்கிரமித்து கார்பார்க்கிங் செய்வதை போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள்)சாப்பிட்டு விட்டு ஒருவர் காரை பின்னோக்கி எடுக்க அதையும் தாண்டி சென்றுவிட வேண்டும் என்பதற்காக வலது பக்கம் வேகமாக ஒதுங்க சாலையின் எதிர்புறம் ஓரமாக நடந்துவந்துகொண்டிருந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் சுதர்சன்(20) ,சங்கரநாராயணன்(20) மீது வேகமாக மோதியுள்ளார்.
இதில் மோதிய வேகத்தில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். சங்கரநாராயணன் காரின் அடிபாகத்தில் சிக்கி கொண்டார் , சுதர்சனம் தூக்கிவீசப்பட்டு பேனட் மீது விழுந்துள்ளார். இதில் அவருக்கும் பலத்த காயம்.
விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் காரை மடக்கி ஓட்டி வந்தவரை வெளியே இழுத்து வந்துள்ளனர். அவர் முழு போதையில் எதையும் தெளிவாக பேச முடியாதவராக இருக்கிறார். போதைப்பவுடரை எடுத்துள்ளதால் அவரால் எதையும் பேசவோ உணரவோ முடியவில்லை என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
காரை ஓட்டிவந்தவரை பாதுகாக்கும் வேலையில் போலீசார் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். காரின் நம்பர் பிளேட்டை உடனடியாக போலீசார் கழற்றி வைத்து விட்டனர். காயமடைந்த இரண்டு கல்லூரி மாணவர்களும் அருகிலுள்ள காளியப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
