சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது.

இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது.

விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்தும், தூக்கிட்டும்  தற்கொலை செய்து வருகின்றனர்.

மஹாராஷ்ட்ரா, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் அது போன்ற தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில், கல்லூரி மாணவர்  விக்னேஷ் என்பவர், இணையதளத்தில் புளூ வேல் என்ற விபரீத விளையாட்டால், நேற்று முன்தினம்  தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்டு இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலைகொண்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற மாணவர், எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்  கடந்த சில நாட்களாக தனது செல்போனில் புளூ வேல் என்ற விளையாட்டை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சசிகுமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல் போனில் புளூவேல் விளையாட்டுக்கான லிங்க் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.