சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவர்களிடையே ராகுல் உரையாற்றும் போது பலதவறான தகவல்களை பரப்பியதாக, தேர்தல் ஆணையத்திடம் பாஜக இளைஞரணி சார்பாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தை அரசியல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி அமலில் உள்ளபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி மாணவர்களை ஒன்று திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார் ராகுல், கல்லூரி நிர்வாகமும் விதியை மீறி செயல்பட்டு உள்ளது.

மேலும், ராகுல் தனது உரையின் போது, அடிப்படை முகாந்திரம் கூட இல்லாத பல விஷயத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து உள்ளார். குறிப்பாக ரபேல் வழக்கு நிலுவையில் உள்ளபோது, இதில் பிரதமரின் பங்கீடு நேரடியாக உள்ளது என ஆதாரமின்றி மாணவர்கள் மத்தியில் பேசி உள்ளார். எனவே தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் நடந்துகொள்ளும் ராகுல் காந்தி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் மனுவினை தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தேர்தல் ஆணையரிடம் வழங்கி உள்ளார்.

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவென்றால், ராமநாதபுர தொகுதியில் நிற்க இளைஞரணிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று கட்சி மேலிடம் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறதாம். இதற்கிடையில் தான், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் ராகுல் காந்தி என லிஸ்ட் போட்டு தேர்தல் ஆணையரிடம் புகார் மனுவை வழங்கி உள்ளார் இளைஞரணி தலைவர்.

அதே வேளையில் பாஜக விற்கு ஒதுக்கி உள்ள 5 தொகுதியில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதால் ஆளுக்கொரு பக்கம் பிசியாக வலம் வருகின்றனர். ஆனால், தமிழக பாஜக இளைஞரணியோ, ராகுல் தேர்தல் விதிமுறைகளை மீறி அடிப்படை ஆதாரம் இல்லாமல் தவறுதலாக விமர்சனம் செய்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டி கட்சியில் தங்களது பங்களிப்பு முழுமையாக உள்ளது என்பதை நிரூபணம் செய்து உள்ளனர்.