திமிர்பிடித்த டி.ஆர்.பாலு: கொந்தளித்த அண்ணாமலை!
டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் எம்.பி.யை தகுதியில்லாதவர் என பேச முடியும் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இன்றைய அலுவல்களின் போது, திமுக எம்.பி.க்களுக்கும், பாஜக எம்.பி.க்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக வெள்ள பாதிப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறிக்கிட முயன்றதாக தெரிகிறது. இதனால், கடுப்பான டி.ஆர்.பாலு, “நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும். நீங்க எம்பியாக இருக்க Unfit (தகுதியில்லாதவர்)” என பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து எல்.முருகன் கூறுகையில், “ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன்னை பார்த்து இந்த வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் திமுகவினரின் மனநிலையை உணர முடிகிறது.” என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அமைச்சரை அவமதிக்கவில்லை என தன் மீதான குற்றச்சாட்டுக்கு டி.ஆர்.பாலு மறுப்பு தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. புறக்கணிக்கிறது. நான் பேசிக்கொண்டு இருக்கும் போது அமைச்சர் எல். முருகன் குறிக்கிட்டு பேசினார். இதனால் வெள்ள நிவாரணம் குறித்து தொடர்பு இல்லாத அமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று தான் குறிப்பிட்டேன். ஆனால் பட்டியிலன அமைச்சரை அவமதித்து விட்டதாக பாஜகவினர் சித்தரித்து கேள்வி எழுப்புகிறார்கள்.” என்றார்.
அமைச்சர் பிடிஆர் வெட்டியாக இருக்கிறார்: அண்ணாமலை காட்டம்!
இந்த நிலையில், ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் எம்.பி.யை தகுதியில்லாதவர் என பேச முடியும் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “டி.ஆர்.பாலு அரசியலுக்கு அவமானம். பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி அவர் இழிவான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல. ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் எல்.முருகன் பற்றிய அவரது கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சமூக நீதியின் உண்மையான தலைவரான நமது பிரதமர் நரேந்திரமோடி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியுள்ளார். பல ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்தும் திமுகவால் ஒருபோதும் செய்யாததை செய்திருக்கிறார்.
மக்களுக்கு சேவை செய்வதில் எல்.முருகன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உடையவர். மாநில அமைச்சராக அவரது அர்ப்பணிப்பு திமுக எம்பிக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே, எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அமைச்சரை “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும். எஸ்.சி. சமூக பிரதிநியை தகுதியற்றவர் என அழைத்ததற்காக அச்சமூக மக்களிடம் டி.ஆர்.பாலு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.