அமைச்சர் பிடிஆர் வெட்டியாக இருக்கிறார்: அண்ணாமலை காட்டம்!

தமிழக அரசு வேலை குறித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்

Annamalai replies to ptr palanivel thiagarajan on his govt job comment smp

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதன் பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.” என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம். பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று. அதாவது, குழந்தைகள்,  ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?” என கேள்வி எழுப்பி அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகக் குடும்பங்களில் இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நான் கூறியதை திமுகவின் குடும்பத் தொலைக்காட்சி திரித்துச் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்.

 

 

ஆனால், ஒரு மாநிலத்தின் அமைச்சர், வேலையில்லாமல் எவ்வளவு தூரம் வெட்டியாக இருக்கிறார் என்பது, திமுகவின் குடும்பத் தொலைக்காட்சியில் வந்த பொய்யான செய்திக்கும் கருத்து சொல்லிக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது. அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுத ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சம்தான் என்பது மனிதவளத் துறையின் அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.

மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு!

30 லட்ச விண்ணப்பதாரர்களில், அரசுப் பணி பெறாத குடும்பத்தாரை கண்டறிந்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது சுமையாக நீங்கள் கருதலாம், ஆனால் அதுதான் உண்மையான சமூகநீதி. இதை பாஜக செய்யும். திமுகவை போல் 3.5 லட்ச காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றமாட்டோம். 

முதலில், அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தேர்வு முடிவுகளோ, நேர்முகத் தேர்வுக்கான அழைப்போ, பணி நியமனமோ, செய்யாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத்தின் தூக்கத்தைத் தட்டி எழுப்பும் பணியை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யட்டும். அதற்கு முன்பாக, இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் தேர்வாணையத் தலைவர் பொறுப்புக்கும் உறுப்பினர் பொறுப்புக்கும் தகுதியானவர்களை நியமிக்கட்டும். திமுகவின் போலிச் செய்திகளுக்கும், பொய் புனைதலுக்கும் கருத்து பிறகு சொல்லிக் கொள்ளலாம்.” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios