மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு!
மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்
மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 60 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலைமை மோசமாக இருக்கும் நபர்களை போபால், இந்தூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் போபால், இந்தூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என ஹர்தா மாவட்ட ஆட்சியர் ரிஷி கார்க் தெரிவித்துள்ளார். போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தின் தீவிரத்தால், அருகிலுள்ள நர்மதாபுரம் மாவட்டத்தின் சியோனி மால்வாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிவிபத்து நடந்த பைராகார்க் பகுதியில் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வெடி விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 100 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், விபத்தின் போது அவ்வழியே சென்ற 30க்கும் மேற்பட்டோர் தீவிபத்தில் சிக்கியதாகவும், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து வெளியான வீடியோவில், பட்டாசு ஆலையில் இருந்து நீண்ட தீ ஜுவாலையும், புகையும் வெளியேறுவதையும், வெடிச் சத்தம் பெரிதாக கேட்டதால் அருகில் உள்ள சாலைகளில் மக்கள் பயத்துடன் ஓடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு: உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் என்ன?
இந்த விபத்து குறித்து முழு தகவல்களையும் வழங்கும்படி அதிகாரிகளிடம் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கேட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்தில் மீட்பு, நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள உடனடியாக உத்தரவிட்ட அவர், மாநிலத்தின் உயர் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 400 போலீசாரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். மாநில அமைச்சர் உதய் பிரதாப் சிங் சம்பவ இடத்தில் பணிகளை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர், ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்பு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.” என பதிவிடப்பட்டுள்ளது.
நாய்கள் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் பொளேர்!
அதேபோல், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. “ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக துயரமான செய்தி வந்துள்ளது. அமைச்சர் உதய் பிரதாப் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தூர் மற்றும் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீய காய பிரிவுகள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.” என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.