Asianet News TamilAsianet News Tamil

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு: உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் என்ன?

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் உள்ளன

Uttarakhand uniform civil code highlights says  live in relationships must register
Author
First Published Feb 6, 2024, 2:01 PM IST

மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து நாட்டில் உள்ள அனைவருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்து அதனை இந்திய சட்ட ஆணையம் மதிப்பாய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் போன்ற ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்களிம்ன் முழக்கங்களுடன் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேறிய பிறகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை பரிந்துரைக்கும், பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!

** உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலான பிறகு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு மாவட்ட அதிகாரிகளிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லை என்றால் அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், ரூ.25,000  அபராதமும் விதிக்கப்படும்

** லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ விரும்பும் 21 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பதிவு செய்ய வேண்டும். மாநிலத்துக்குள் மட்டுமல்லாமல், அம்மாநிலத்துக்கு வெளியே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ விரும்பினாலும் பதிவு செய்ய வேண்டும்

** லிவிங் டுகெதர், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் முடிக்காமல் இணைந்து வாழ்வதை குறிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற உறவுகள் சகஜமாக இருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அந்த கலாசாரம் மேலோங்கியுள்ளதற்கு இடையே, அத்தகைய உறவுகளை பதிவு செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் கூறுகிறது

** பொதுக் கொள்கை மற்றும் ஒழுக்கத்திற்கு எதிராக இருந்தாலோ, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ விரும்பும் இருவரில் யாரேனும் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தாலோ அல்லது வேறு உறவில் இருந்தாலோ, ஒருவர் மைனராக இருந்தாலோ, அடையாளம் தொடர்பாக ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தாலோ லிவ்-இன் உறவுகள் பதிவு செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

** மத வேறுபாடின்றி இரு பாலினருக்கும் ஒரே மாதிரியான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து சமூகங்களிலும் உள்ள பெண்களுக்கு திருமண வயது 18ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

**  சிறார் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தற்போதுள்ள சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தும். அனைத்து சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான குழந்தை தத்தெடுப்புச் சட்டங்களை உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

** மகன்கள் மற்றும் மகள்கள் இருவருக்கும் தந்தையின் சொத்தில் சம உரிமை உள்ளது. பெண்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தந்தையின் சொத்தில் சம உரிமை பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது

** ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் போன்ற இஸ்லாமிய நடைமுறைகளை குற்றம் என உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் கூறுகிறது

** விவாகரத்து கோருவதற்கான கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான அளவுகோல்கள், நியாயங்கள் பின்பற்றப்படும். கணவன்மார்களுக்குப் பொருந்தும் விவாகரத்துக்கான அளவுகோல்கள் மனைவிகளுக்கும் பொருந்தும்

** பலதார மணம் தடைசெய்யப்படும். இதனால் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணங்கள் தடுக்கப்படும்

** பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான பரம்பரை உரிமைகள் வழங்கப்படும்

** குழந்தை திருமணங்கள் முற்றிலும் தடை செய்யப்படும்

** மாநிலத்தின் மக்கள்தொகையில் 2.9% உள்ள பழங்குடி சமூகங்களுக்கு பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம்: நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, வெற்றி பெற்றதும் பொது சிவில் சட்ட மசோதாவைத் தயாரிக்க, உத்தரகாண்ட் அரசு, 2022ல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, சமூக ஆர்வலர் மனு கவுர், முன்னாள் தலைமைச் செயலர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா டங்வால் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்தது. அக்குழுவினர், நான்கு தொகுதிகளாக 740 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான வரைவைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தனர். அதனடிப்படையில், உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios