ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர்: முதல்வர் ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை!
தென் மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடியை இன்று இரவு 10.30 மணிக்கு சந்தித்து வெள்ள நிவாரண பணிகள் குறித்தும், தென் மாவட்ட கனமழை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்கவுள்ளார். மேலும், மத்திய அரசிடம் கோரிய நிவாரணத் தொகையை விடுவிக்குமாறும் அப்போது அவர் வலியுறுத்தவுள்ளார்.
முன்னதாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீட்பு, நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டபடி டெல்லி சென்றார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் கண்காணித்து களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளார்.
‘ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தார்’ என்ற புகழ்பெற்ற பழமொழி, ஸ்டாலின் செயலால் மெய்பித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருக்கும் போது பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளார். இது அவரது உண்மையான பயண நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட கடைசி நிமிட ஏற்பாடாகும்.
26/11 மும்பை தாக்குதலின்போது, அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் ஓபராய் ஹோட்டலுக்கு வெளியே திரைப்பட தயாரிப்பாளரை அழைத்து வந்தார். அதேபோன்று, வெள்ள நிவாரணத்தை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள அவரது மகன், திரைப்பட இயக்குனர் ஒருவருடன் ஆய்வு செய்து வருகிறார். மாநில அரசின் நிவாரணம் என்பது தென் தமிழக மக்களுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை: முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக, தென் மாவட்ட கனமழை மீட்பு பணிகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மழைப்பொழிவு கடுமையான உடனேயே 8 அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். மேலும், தென் மாவட்ட கனமழை பாதிப்பு, மீட்பு, நிவாரண பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நாளை காலை டெல்லியில் இருந்து நேரடியாக விமானம் மூலம் தூத்துக்குடி செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.