உதயநிதி சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும்: அண்ணாமலை கேள்வி!
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ள தொடர்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். திமுக பைல்ஸ் என்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டபோதும், நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். 1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு - தொமுச பேரவையின் முன்னாள் துணை தலைவர் வி.எம்.ஆர்.சபாபதி இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது, கருப்பு பணத்தை மீட்போம், வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவோம், ஆண்டுக்கு 2 லட்சம் வேலை வாய்பை உருவாக்குவோம் என பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தார்கள். ஒன்றையாவது நிறைவேற்றினார்களா என கேள்வி எழுப்பியதுடன், 15 ரூபாய் கூட மக்களுக்கு பாஜகவினர் கொடுக்கவில்லை என விமர்சித்தார்.
மகளிர் உரிமை தொகைக்கு இது கட்டாயம்.! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்.!
இதையடுத்து, பாஜகவின் தேர்தல் வாக்குறுதியான ரூ.15 லட்சம் தொடர்பான விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது என விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை.” என விளக்கம் அளித்திருந்தார்.