திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகி விட்ட கொலை: அண்ணாமலை கடும் கண்டனம்!
திமுக ஆட்சியில் கொலை என்பது தினசரி வாடிக்கையாகி விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). விருத்தாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த ஜீவா, இன்று காலை வழக்கம் போல பள்ளி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த மின்வாரிய தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயடைந்த ஜீவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆனந்தை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி செல்லும் மாணவர் பேருந்து நிறுத்தத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திமுக ஆட்சியில் கொலை என்பது தினசரி வாடிக்கையாகி விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது.” என குற்றம் சாட்டியுள்ளார்.
நியூஸ் க்ளிக் விவகாரம்: சீதாராம் யெச்சூரி இல்லத்தில் ரெய்டு!
மேலும், “சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதலமைச்சர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.” எனவும் அண்ணாமலை சாடியுள்ளார்.
“முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?” எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.