மோசடி பேர்வழிகள்: பாஜகவினருக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை!

மோசடி பேர்வழிகளிடம் பாஜகவினர் உஷாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

BJP narayanan thirupthy warns bjp cadres about fraud gang smp

பாஜகவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் விலகிய நடிகை கெளதமி, அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து சொத்து, பணம், உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாகவும், அவருக்கு பாஜவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவரிடம் மோசடி செய்ததாக கூறும் நபர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும் பாஜக விளக்கம் அளித்தது.

இதனிடையே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்ற ஆணையம் (MSME Promotion Council) என்ற அமைப்பில் பதவி வாங்கித் தர கோடிக்கணக்கில் பணம் பெற்று, மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் தேசிய தலைவராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவும் உள்ளார்.

ஆனால், இப்படி ஒரு ஆணையமே இல்லை எனவும், மோசடி பேர்வழிகளிடம் பாஜகவினர் உஷாராக இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், பா ஜ க பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் நண்பர் துரைப்பாண்டியன் கோபால் சாமி மற்றும் சில நண்பர்களுடன் என் அலுவலகம் வந்திருந்தார். மத்திய அரசின் சிறு,குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்ற ஆணையத்தின் (MSME Promotion Council) கூட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். மத்திய அர‌சி‌ன் அங்கீகாரம் பெற்ற அப்படி ஒரு ஆணையம்  இருப்பதாக தெரியவில்லையே என நான் கூறினேன்.  அப்போதே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அதன் பின்னர் அந்த அமைப்பு எ‌ப்படி செயல்படுகிறது என கண்காணித்து வந்த நிலையில்,  கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் MSMEPC  பாண்டிச்சேரி மாநில தலைவராக தன்னை நியமனம் செய்ய சிலர் அணுகினார்கள் எ‌ன்று‌ம்,  அதற்கு ஒரு பெரும் தொகை கேட்பதாகவும் கூறினார்.  அப்படி ஒரு ஆணையமே மத்திய அரசில் இ‌ல்லை என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் நண்பர். 

 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று OBC  அணியின் மாநில செயலாளர் S V Palanisamy  அவர்கள் என்னை தொடர்பு கொண்டு, சேலத்தில் இந்த ஆணையத்தின் நிகழ்ச்சி நடக்கப் போவதாக தெரிவித்தார். இந்த தொல்லை நம்மை  விட மறுக்கிறதே என எண்ணிக் கொண்டே, முதலில் நான் குறிபிட்ட நண்பர்கள் துரைப்பாண்டியன் மற்றும் கோபால் சாமி அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.  ஏற்கனவே கோபால் சாமி அவர்கள், இந்த ஆணையத்தின் 'தேசிய தலைவர்' என்று தன்னை சொல்லிக்  கொள்கிற முத்துராமன் என்ற நபரிடம் தமிழக தலைவர் பதவிக்கு ரூபாய் 50 லட்சம் கொடுத்து, தலைவர் பதவியும் வரவில்லை,  கொடுத்த பணமும் வரவில்லை என்று கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தேன். 

இது குறி்த்து மேலும் விசாரிக்கையில்,  முத்துராமன் எனும் நபர் மேலு‌ம் சிலருடன் சேர்ந்து ம‌த்‌திய அர‌சி‌ன் சின்னத்தை தவறாக பயன்படுத்தி வந்ததோடு,  பிரதமருடன் இருப்பது போன்ற போலி புகைப்படங்ககளை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததையும், பாஜக வை சேர்ந்த சிலரையும், பொது மக்களில் பலரையும் பதவி கொடுப்பதாக எமாற்றி பண‌ம் வசூல் செய்தது குறித்து அறிந்தேன்.

இது குறி்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவ‌ர்க‌ளிட‌ம் ஆலோசித்தேன். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு என்னை காவல் துறையில் புகாரளித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணித்தார். 

தென்காசி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

அதற்கான சில முக்கிய ஆதாரங்களை தமிழக காவல்துறை தலைவருக்கு (DGP) அனுப்பி போலி ம‌ற்று‌ம் மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.  கோபால்சாமி அவர்களை உடனடியாக சேலத்தில் புகார் அளிக்க செய்தேன். மேலும், சில வருடங்களுக்கு முன் இதே போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட விஜயகுமார் என்ற நபரை கைது செய்ய உறுதுணையாக இருந்த சேலம் மாவட்ட துணைத்தலைவர் 'ஸ்பீடு' செல்வராஜ் அவர்களை தொடர்பு கொண்டு கண்காணிக்க சொன்னதன் அடிப்படையில், காவ‌ல்துறை‌யின‌ரிடம் ஒருங்கிணைந்து நம் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இ‌ந்த நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை  உறுதிப்படுத்தியதையடுத்து, திங்கள்கிழமையன்று  முத்துராமன் எ‌ன்ற நபரும் அவருக்கு துணையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக தொழில் அணி தலைவர் கோவர்த்தனன் அவர்கள் மோசடி நபர்  முத்துராமன் குறித்து மதுரை புறநகர் காவல் துறையில் புகார் அளித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இது குறித்து கோவர்த்தனன்  தொடர்புடைய அமைச்சர் அலுவலகத்தை திங்களன்று தொடர்பு கொண்டு, இந்த மோசடி பேர்வழிகள் குறித்து விளக்கி,  அமைச்சகத்தின் மூலமும் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்து கொண்டிருக்கிறார்.

பாஜக வினர் மற்றும் பொது மக்கள் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  இந்த விவகாரத்தில் எனக்கு  உறுதுணையாக இருந்த திருப்பூர் துரைப்பாண்டியன்,  சேலம் கோபால்சாமி, சேலம் Selvaraj Sn  மாநில தொழில் அணி தலைவர்  கோவர்த்தனன், மாநில OBC அணி செயலாளர், கோவை பழனிசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.  

குறிப்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுங்கள் என்று பணித்த பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் அவர்களுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவி்த்துக் கொள்கிறேன். இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் பாஜக வினர் விழிப்புடன் இருப்பதுடன், சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க பாடுபடும்படி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios