பா.ஜ.க. பிரமுகர் கழுத்து நெறித்து கொலை – சடலத்தை தூக்கில் தொங்கவிட்ட மர்மநபர்கள்
திருப்பூரில் மாவட்ட பா.ஜ.க. பிரமுகரை கொலை செய்து, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் முத்தணம்பாளையம் வாய்க்கால் மேடு சரஸ்வதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (51). திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவராக இருந்து வந்தார். மேலும் பின்னலாடைகளுக்கு தேவையான லேபிள் தயாரிக்கும் நிறுவனமும் நடத்தி வந்தார். இவரது மனைவி புஷ்பா.
இன்று காலை முத்து, தனது வீட்டின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்றார். பின்னர், நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, மாரிமுத்து தூக்கில் சடலமாக கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, காலையில் முத்து குடோனை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவரது கை மற்றும் கால்களை கட்டிவிட்டு, கழுத்தை நயிலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கேயே தூக்கில் சடலத்தை தொங்கவிட்டு, மர்மநபர்கள் தப்பி சென்றனர் என தெரிந்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியில் முத்து கொலை செய்ய்ப்பட்டாரா, தொழில் போட்டியா அல்லது வேறு காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதை அறிந்ததும் மாவட்டம் முழுவதும் உள்ள பாஜகவினர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் பாஜக பிரமுகரை கழுத்தை நெறித்து கொன்று, தூக்கில் சடலமாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
