விருதுநகர்

பண பலம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குறுக்கு வழியில்தான் திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்க்கேற்க நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வந்திருந்தர்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "காவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. உடனடியாக மத்திய அரசு,  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நான்கு வார காலத்துக்கு முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனையொட்டி, தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டமும், உடனடியாக பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற முடிவும் வரவேற்க வேண்டிய விஷயம்.     

ஏற்கெனவே, தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டதால், நீராதாரம் குறைந்துள்ளது. மேலும், மணல் அள்ளப்படுமானால் எதிர்காலத்தில் நீராதாரம் சுத்தமாக வறண்டுவிடக் கூடிய நிலைமை உருவாகும். நீராதாரத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் அதனை அழிக்க நினைக்கக் கூடாது.

பண பலத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.