ராமநாதபுரத்தில் பாஜக தொண்டர் ஒருவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பாஜக தொண்டர், படுகாயமடைந்துள்ளார்.

ராமநாதபுரம் பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ளவர் வீரபாகு (45). இவர், நேற்று இரவு தன்னுடைய ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டு, பேராவூர் அருகே வந்து கொண்டிருந்தார். ஆளில்லாத இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, வண்டியில் வந்த நபர்கள், திடீரென நிறுத்த சொல்லியுள்ளனர். 

வண்டியை விட்டு இறங்கியவர்கள், அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 4 பேருடன் சேர்ந்து வீரபாகுவை அரிவாளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் வீரபாகுவுக்கு
இரண்டு கைகளிலும் பலமான வெட்டு விழுந்தது. அவரது தலையிலும் மர்மநபர்கள் வெட்ட முயற்சித்தபோது வீரபாகு அதிர்ஷ்டவசமாக தப்பினார். பின்னர் அந்த மர்ம நபர்கள், தப்பியோடி விட்டனர்.

பலத்த வெட்டுக்காயங்களுடன் வீரபாகு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை தற்போது
சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வீரபாகு தாக்கப்பட்டது குறித்து, பேசிய ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம். பிரகாஷ் மீனா, குற்றவாளிகளைப் பிடிக்க கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை
தலைமையில், துணை கண்காணிப்பாளர் நடராஜ் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறினார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்கள் தாக்கப்பட்டதை அறிந்த பாஜக கட்சி தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.