புதிய தலைமுறை, தமிழ்ஜனம் தொலைக்காட்சிகளை அரசு கேபிளில் இருந்து நீக்கியதாகக் கூறி, திமுக அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதாக தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுத்து, பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியை தமிழ் தொலைக்காட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தமிழ் அல்லாத தொலைக்காட்சியாக பட்டியலிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பத்திரிகை ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாகும் என பாஜக கூறியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எழுந்துள்ள அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டப்படி உரிமம் பெற்று, இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டுதல்படி செயல்படும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் பத்திரிக்கை சுதந்திரத்தை பேணிக் காக்கும் வகையில் அரசு கேபிள் டிவியில் இணைக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் மக்களின் உரிமைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும். எந்த ஊடகங்களையும் அரசியல் உள்நோக்கம் இன்றி பிரித்துப் பார்க்காமல் பாரபட்சமின்றி செய்திகள் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் ஊடகங்களின் கடமைகளை மற்றும் மக்களின் உரிமைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும்.
திமுக அரசு, புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி மற்றும் தமிழ்ஜனம் செய்தி தொலைக்காட்சி ஆகியவற்றை அரசு கேபிள் நெட்வொர்க்குகளில் இடம்பெற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் எந்தவித அரசியல் அழுத்தம் இல்லாமல் சுய சார்புடன் செய்திகளை வெளியிடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக இந்தியாவில் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகத்தின் உயர் தரத்தைப் பராமரிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு மட்டுமின்றி இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டுதலின்படி செய்திகளை முழுமையாகவும் பொறுப்புடனும் செயல்படுத்துவதை தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் தடுக்காமல், நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தல் அளிக்காமல், ஊடகங்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கரூர் 41 பேர் வெளியான கோர சம்பவத்தின் முழுமையான காட்சிகளை, கூட்ட நெரிசல் செய்திகளை, திமுக அரசின் தவறுகளை விமர்சன ரீதியாக வெளிப்படுத்தியதற்காக, புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கேபிள் நெட்வொர்க்குகளில் இருந்து தடை செய்த திமுக அரசின் முடிவு சட்டவிரோதமானது மற்றும் தவறான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியை தமிழ் தொலைக்காட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தமிழ் அல்லாத தொலைக்காட்சியாக பட்டியலிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பத்திரிகை ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாகும்.
இதேபோல், திமுக அரசியல் நடைபெறும் தவறுகளை, நிர்வாக சீர்கேடுகளை நடுநிலையோடு, உள்நோக்கம் இல்லாமல் நேர்மையாக வெளிப்படுத்தி வரும் தமிழ்ஜனம் செய்தி தொலைக்காட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு கேபிள் தொலைக்காட்சியில் இடம் பெறுவதற்கான நியாயமான உரிமை சட்ட விரோதமாக மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி உரிமம் பெற்று, இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழ் ஜனனம் தொலைக்காட்சியை அரசு கேபிளில் சட்டப்படி உடனடியாக நினைக்க வேண்டும். தமிழக மக்களுக்கு இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள தமிழ் ஜனனம் தொலைக்காட்சியை பார்ப்பதற்கான காட்சி உரிமையை பறிக்கக் கூடாது.
ஜனநாயகத்தின் தூணாக இலக்கணமாக விளங்கும் இந்திய நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு இந்திய அரசியலமைப்பின் படி செயல்படும் ஊடகங்களை வெறுக்கும் அல்லது நசுக்கும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசுக்கு, ஆளுகின்ற கட்சிக்கு எதிராக எழும்பும் எதிர்க்குரல்களை அடக்குவதற்கும், விமர்சனங்களை மறைப்பதற்கும் தமிழக அரசின் செய்தி ஒளிபரப்பு துறை செயல்படுவது வருந்தத்தக்கது. ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுடைய அடிப்படை உரிமைகளை பேணிக்காக ஊடகங்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை தவறுகளை முற்றிலுமாக களைய வேண்டும். மேலும் ஊடகங்கள் சுதந்திரமாகவும், பயமின்றியும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சினையை தலையிட்டு அனைத்து தகுதி வாய்ந்த தொலைக்காட்சிகளுக்கும் அரசு கேபிள் தொலைக்காட்சி கேபிள் இணைப்பில் தொடர அனுமதி வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு அரசு, கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகிய அரசியல் சாசன உரிமைகளை மதித்து, எந்தவொரு பாகுபாடு, அழுத்தம் அல்லது அடக்குமுறையின்றி அனைத்து ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக தமிழகத்தில் செயல்பட முடியும் என்பதை உறுதி செய்து இந்தியாவிற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
மேலும் பத்திரிகை தர்மத்தின் படி மக்களுக்கு நேர்மையுடன் செய்திகளை வழங்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில், தங்கள் உயிரை துச்சம் என மதித்து, தமிழகத்தில் நடக்கும் சட்டவிரோத தவறுகளை நிர்வாக சீர்கேடுகளை துணிந்து செய்திகளாக வெளியிட்டு உண்மைகளை வெளியிட்டு நேர்மையுடன் தங்கள் பணியைச் செய்யும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு எதிரான தமிழகத்தில் நடக்கும் பல்வேறு வகையான மிரட்டல்களை, துன்புறுத்தல்களை, தாக்குதல்களை கொலை முயற்சிகளை தடுத்து பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடுமையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பத்திரிகையாளர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ பதிவாளர்களின் தன்மானத்தையும் சுயமரியாதையும் பாதிக்கும் வகையில் அவமானப்படுத்தும் வகையிலான சீண்டல்கள், மிரட்டல்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், கொலை முயற்சிகள் மற்றும் பொய் வழக்குகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இனி பத்திரிகையாளர்கள் இதுபோன்ற சம்பவங்களால் பாதிப்படையும் பொது தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல், கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது பாரபட்சமில்லாமல் வழக்கு பதிவு செய்து, சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுத்து, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீதியை நிலை நாட்ட வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களால் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரித்து, ஜனநாயகத்தின் நிலைநாட்டி நீதியை பெற்றுத் தருவதன் மூலம் பத்திரிகையாளருக்கு எதிரான சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்படும்.
அதேபோல் கருத்து சுதந்திரத்தை பேணிக் காக்கும் வகையில், தன்னுடைய கருத்துக்களை பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலமாக சுதந்திரமாக வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளராகவும் முதலமைச்சராகவும் இருந்த முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் மகனாக, பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நீங்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று தமிழக மக்கள் மற்றும் பத்திரிகையாளர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இனி எதிர்காலத்தில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், துணிவுடன்,நேர்மையுடன் பயமின்றி, எந்தவித அச்சுறுத்தல் என்று பணியாற்ற முடியும் தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.
முதலமைச்சராக, பத்திரிகையாளரின் மகனாக கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகிய அரசியல் சாசன மதிப்புகளை நீங்கள் உயர்த்திப் பிடித்து தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம் என ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
