கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டைகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளத்தில் ஏற்பட்டுள்ள நோய் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரள எல்லையில் 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகிறது. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து கோழிகள், குஞ்சுகள் விற்பனைக்கு வராமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளத்தில் கோழியினம் சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டு, தடுப்பு பணிக்காக 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புதுறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறவை காய்ச்சல் தொடர்பான அனைத்து விதமான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு, முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர், பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாக தேவையான அளவு கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் நோய் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சரணாலயங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களில் இடம்பெறும் பறவைகளுக்கு நோய் தாக்குதலோ மற்றும் இறப்போ ஏற்பட்டால் உடனடியாக கால்நடை துறைக்கு தெரிவிக்க சுற்றுக்சூழல் மற்றும் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய முட்டை உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழு, நாமக்கல் கோழி பண்ணையாளர் சங்கம், நாமக்கல் மற்றும் பல்லட்டம் கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் கேரளத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்ற பொருள்களை பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலர்களிடம் முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
