பயணச்சீட்டு கிடைக்காமல் திண்டாடும் ரயில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி, செல்போன், லேப்டாக் ஆகியவற்றை அபேஸ் செய்த பீகார் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா சதுக்கம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெல்ஸ் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி நடந்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்களை போலீசார், அழைத்தனர்.
போலீசாரை கண்டதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓடினர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (20), தர்மேந்தர் (23), ராஜ்குமார் (19) என தொரிந்தது. மேலும் விசாரணையில், சேப்பாக்கம், அண்ணா சதுக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறித்தது தெரிந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கிடைக்காமல் திண்டாடும் வட மாநிலத்தவர்களிடம், இந்தியில் பேசி சேப்பாக்கம் பகுதிக்கு அழைத்து வருவார்கள்.
பின், பயணச்சீட்டு விற்பனை செய்யும் அலுவலகத்து அழைத்து செல்வதுபோல், அவர்கள் கையில் இருக்கும் செல்போன், லேப்டர்ப் மற்றும் உடமைகளை பறித்து கொண்டு தப்பிவிடுவார்கள். அவற்றை வெளியில் விற்று,ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர் என தெரிந்த்து.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, 52 செல்போன், 2 லேப்டாப், 13 'டிராவல் பேக்', 2 சூட்கேஸ்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
