வேலூர்

அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பி மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் வேலூரில் உள்ள குடியாத்தத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், சுண்ணாம்பு பேட்டையைச் சேர்ந்த மறைந்த பெருமாள் நாயுடுவின் மகன்கள் பி. வரதராஜ் (60), பி. ரவி (52). இவர்கள் இருவரும் தனித்தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வரதராஜ் அவரது வீட்டில் உயிரிழந்தார். அப்போது ரவி மாதனூர் அருகே கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். 

வரதராஜ் இறந்த செய்தியை அவரது உறவினர்கள் செல்போன் மூலம் ரவிக்கு தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பி ரவி மயக்கம் அடைந்துள்ளார். 

உடனே, காரில் இருந்தவர்கள் ரவியை மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இருவரது உடல்களும் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் தம்பி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.