ஈரோடு

பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு 35% போனஸ் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி - ஐக்கிய பீடி  தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஈரோட்டில் ஏஐடியுசி - ஐக்கிய பீடி  தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதன் துணைத் தலைவர்  கே.ஆர்.கலிபுல்லா தலைமை தாங்கினார்.  சங்கப் பொதுச்செயலாளர் எஸ்.சின்னசாமி பீடி தொழிலாளர் பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், "பீடி தொழிலாளர்களின் நலனுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வருங்கால வைப்பு நிதித்  திட்டம் மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் நெருக்கடியில் இருந்து வந்த பீடி தொழிலுக்கு கடந்த ஆண்டு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதனால் பீடி தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு, பீடி தொழிலுக்கு விதித்துள்ள 28% ஜிஎஸ்டி வரியைக் கணிசமாக குறைக்க வேண்டும்.

பீடி சுற்றும் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்கள் என்பதால் பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு  போனஸ் வழங்குவது வழக்கமாகும். அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான போனஸாக ஊதியத்தில் 35%  வழங்க பீடி தொழில் நிறுவனங்கள் முன் வர வேண்டும். 

பீடி தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஆறு நாள்களுக்கு குறைந்தபட்சம் 1000 பீடிகள் சுற்றத் தேவையான இலை, தூள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
இதில், சங்கத் துணைத் தலைவர் கே.எம்.யூசுப், துணைச் செயலாளர் கே.எச்.அசரப் அலி, கே.சிக்கந்தர், சிராஜ்தீன், குல்முகமது, சலீம், ரஹீம், அப்துல் ஜலீல் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.