76 ஆண்டுகளாக உலகெங்கும் இருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்காக ஒலித்துவந்த பி.பி.சி தமிழோசை வானொலி சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அதாவது கடந்த 1941ம் ஆண்டு, மே 3-ந்தேதி பி.பி.பி. தமிழோசை வானொலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக தொடக்கத்தில் சிற்றலையாக பி.பி.சி வானொலி தமிழோசை சேவை வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தொடங்கப்பட்டது.

அதன்பின், மக்களிடத்தில் பரவலான வரவேற்பை பெற்றதையடுத்து, 80களில் வாரத்துக்கு இரு நாட்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டன. அதன் பின் 90களில் நாள்தோறும் ஒலிபரப்பை தொடங்கிய பி.பி.சி. இரவு 9.15 மணி முதல் 9.45 வரை நிகழ்ச்சிகளையும்,செய்திகளையும் ஒலிபரப்பி தமிழ்மனங்களையும், செவிகளையும் குளிர்வித்தது.

தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள மக்கள் சர்வதேச செய்திகளையும், நடப்புச் செய்திகளையும் அறிந்து கொள்ள பி.பி.சி. தமிழோசையை பயன்படுத்தி வந்தனர் என்றால் மிகையாது. குறிப்பாக இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் நடந்து வந்தபோதும், உச்சகட்டத்தை அடைந்தபோதும்,  பி.பி.சி. தமிழோசை செய்தியை கேட்க உலகெங்கும் உள்ளதமிழர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், செய்திகள், செய்தி குறித்த திறனாய்வு நிகழ்ச்சி என்று மாறுபட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. பாட்டு ஒன்று கேட்டேன் என்ற பெயரில் ஆங்கில கவிஞர் வில்லியம் சேக்ஸ்பியர், ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆகியோரின் கவிதைகளை மொழிமாற்றம்செய்து தமிழில் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிகளை கேட்ட பலருக்கும், புதிய தமிழ்சொற்கள் அறிமுகமானது என்றாலும் வியப்பில்லை. கொரில்லா போர், ஹெலிகாப்டர் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு கூட, உலங்கு ஊர்தி, மறைந்து இருந்து திடீர் எனத்தாக்கும் முறை என தமிழ் அர்த்தம் கூறி, மக்களுக்கு புரிய வைத்தது. 

மேலும் பல்வேறு வகையான வரலாற்று விசயங்களையும் சுவைபடக் கூறி, மக்களின் அந்த அரை மணிநேரமும் கட்டிப்போட்டது பி.பி.சி. தமிழோசை. குறிப்பாக இலங்கை வாழ் மக்களும், உலகத் தமிழர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்க மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், காலமாற்றம் ஏற்படும் போது, அந்த சுழலில் சிக்கி பழைமைகள் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கைதான். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் படையெடுப்பு, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றின் பரிணாமத்தால் வானொலி சேவைக்கு மக்களிடத்தில் மவுசு குறைந்தது.

கடந்த 2015ம் ஆண்டு மே 3-ந்தேதிதான் பி.பி.சி. தமிழோசை சிற்றலை வானொலி தனது பவளவிழாவைக் கொண்டாடியது. இந்நிலையில், 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தாக்கத்தால் பி.பி.சி. சிற்றலைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 30-ந்தேதியோடு ஒலிபரப்பை நிறுத்தப்போவதாக பி.பி.சி. அறிவித்துஇருந்து. 

அதன்படி, தனது கடைசி நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பி தமிழோசை காற்றில் கலந்துவிட்டது.