எத்தனை அசிங்கப்பட்டாலும், எவ்வளவு விமர்சனத்துக்கு உள்ளானாலும் ’அடங்கமாட்டோம்! அத்துமீறுவோம்! அட்ராசிட்டி செய்வோம்!’ என்று தங்கள் தொப்பி மீது சத்தியமே செய்துவிட்டது போல் தமிழக போலீஸ்.

திருச்சியில் கணவன் மனைவியை பைக்கில் துரத்திச் சென்று கடைசியில் அது உயிர் பலியில் முடிந்த விவகாரம், திண்டுக்கல்லில் லேடி போலீஸ் காருக்குள் உட்கார்ந்து சரக்கடித்த விவகாரம், சென்னை கடற்கரையில் போலீஸ் உயரதிகாரியின் மகளை, கணவரோடு சேர்த்து வீடியோ எடுத்து மிரட்டியது, என தமிழக போலீஸ் மீது நித்தம் ஒரு விமர்சனம் ஆதாரப்பூர்வமாக வெடித்து, அசிங்கப்படுத்திக் கொண்டும், கடும் விமர்சனம் செய்து கொண்டும் இருக்கிறது.

இந்நிலையில் அந்த வரிசையில் மீண்டும் சென்னையின் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மிக அக்கிரமமான குற்றச்சாட்டு ஒன்றில் ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளனர்.

தி நகரில் அம்மா மற்றும் சகோதரியுடன் என மூவராக பைக்கில் வந்தாராம் ஒரு இளைஞர். போக்குவரத்து போலீஸ் நிறுத்தி கேட்க, அதன் பின் எழுந்த வாக்குவாதத்தில் ஏதோ சலசலப்பாகி இருக்கிறது. இதற்காக அந்த இளைஞரை லைட்டு கம்பத்தில் சாய்த்து ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக் கொள்ள, வயதான போலீஸ் அதிகாரி அந்த இளைஞனின் இடது கையை பிடித்து ரப்பர் போல் வளைத்து மடக்க, மற்றொரு அதிகாரி அவனது கையில் மாட்டுத்தனமாக அடிக்க என்று அட்டூழியம் நீள்கிறது.

இதில் இன்னொரு அவலம் என்னவென்றால், தன் மகன் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து துடிக்கும் தாயை லேடி போக்குவரத்து போலீஸ் அதிகாரி மடக்கிப் பிடித்து தடுப்பதுதான்.

வைரலாக துவங்கியிருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ரத்தம் கொதிக்கிறது. உண்மையில் நடந்த பிரச்னைகள் என்னவாக இருந்தாலும் ஒரு சிவிலியனை இப்படி மூன்றாம்தரமாக பொதுவெளியில் போலீஸ் நடத்தும் சம்பவம் மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம்.

‘டிராஃபிக் போலீஸுக்கு அடிக்க உரிமை கிடையாது. சட்டத்தில் இடமில்லை. இப்படியான சூழலில் இப்படி கம்பத்தில் மடக்கி வைத்து கையை உடைக்க முயற்சிப்பது அட்ராசிட்டியின் உச்சம். அதே நேரத்தில் முழுமையான தகவல்கள் இன்றி பரவுகிறது இந்த வீடியோ. உண்மையில் நடந்த விவாகரம் என்ன? என்பது பற்றியும் விரிவான தகவல்கள் தேவை.

ஆனாலும் போலீஸின் செயல் ரத்தம் கொதிக்க வைக்கிறது.’ என்று கொதிக்கிறார்கள் விமர்சகர்கள்.
தமிழக போலீஸ் திருந்த வேண்டும்.