தூத்துக்குடி

தூத்துக்குடியில், 40 மில்லி மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுரையும் அதனை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவுமிட்டார ஆட்சியர் வெங்கடேஷ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். உணவுப் பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் வெங்கடேஷ் பேசியது:

“தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு தரமான உணவு வழங்குவதற்கு வியாபாரிகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சிறு கடைகள், சாலையோர சிற்றுண்டி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்.

உரிமங்கள் காலாவதியாகாமல் நடப்பில் இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து பதிவு செய்தல், புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

40 மில்லி மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உணவுக்கான உப்பில் குறிப்பிட்ட அளவில் அயோடின் கலந்திருக்க வேண்டும். போலி உப்பு தொழிற்சாலைகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் அந்தப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

சேமிப்பு கிட்டங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் புகையிலை பொருட்கள் கண்டறிந்தால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படும். இவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் துறை அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.