Banks are dull without staff Rs 400 crore transaction affected in Dharmapuri

தருமபுரி

வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் "டல்" அடித்தன. வேலைநிறுத்த போராட்டத்தால் தருமபுரியில் ரூ.400 கோடி பரிவர்த்தனை பாதித்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

இதனொரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நேற்று ஊழியர்கள் இல்லாததால் "டல்" அடித்தன. வங்கிகளில் பணபரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. 

தருமபுரி முழுவதும் உள்ள 215 வங்கி கிளைகளில் பணிபுரியும் 1115 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.400 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல தலைவர் ராமவைரவன் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் பிரபாகரன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த வீரமணி, ராஜேந்திரன், ராமமூர்த்தி உள்பட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.