மோசமான கிரெடிட் ஸ்கோரைப் பெற்றிருந்த நபரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் உத்தரவு சரியானது தான் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி CBO என்ற பணியிடத்திற்கு ஆட்தேர்வு செய்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட நபர் ஒருவரின் சிபில் ஸ்கோரை வங்கி ஆய்வு செய்தது. அப்போது குறிப்பிட்ட நபர் தாம் பெற்ற தனிநபர் கடனைத் திரும்ப செலுத்துவதில் மிகவும் அலட்சியம் காட்டியதும், இதனால் அவரது கிரெடிட் ஸ்கோர் மிகவும் மோசமாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரின் பணி நியமனத்தை ரத்து செய்வதாக SBI உத்தரவிட்டது. வங்கியின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நியமன ஆணை ரத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த வங்கி நிர்வாகம், குறிப்பிட்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் தனிநபர் வாழ்க்கையில் சிறந்த நிதிப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையிலேயே நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
வங்கியின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் பொதுத்துறை வங்கியில் நிதி தொடர்பாக பணி செய்யும் நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சீரான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வங்கி மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் சரியானதே என்று உத்தரவிட்டுள்ளது.
