கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குக்கு எதிராக போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ஜெயராமனின் தந்தை தங்கவேலு காலமானதை அடுத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வரும் 26 ஆம் தேதி வரை ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கதிராமங்கலத்தில் ஓஎன் ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு ,குடிநீரில் எண்ணெய் கலந்து விடுகிறது. இதனால் குடிநீர் மாசடைந்துள்ளதால் மக்கள் கடும் அவதிபட்ட நிலையில் , அனைத்து மக்களும் போரட்டத்தில் குதித்தனர்.

அப்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் மீது 12பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 பேரை விடுவிக்க வலியுறுத்தி கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக்குறைவால் மயிலாடுதுறையை அடுத்த சேந்தங்குடியில் காலமானார்.

இதையடுத்து  தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜெயராமனை விடுவிக்குமாறு அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷா பானு , பேராசிரியர் ஜெயராமனுக்கு வரும் 26 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.